இப்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் அரசியல் விமர்சகர் பொன்ராஜ். தவெக கட்சியில் இருக்கும் பெண்களை அவதூறான வார்த்தைகளால் பேசி ஒட்டுமொத்த பெண்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் பொன்ராஜ். ஆனால் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள். நான் இதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என நேரடியாகவே தொலைபேசி வாயிலாக பத்திரிக்கை நிருபருக்கு பேட்டி கொடுத்த ஆடியோ இப்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
விஜய் அறிக்கை;
இவர் பேசிய அந்த ஆடியோவை கேட்ட ஒட்டுமொத்த பெண்களும் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதே சமயம் விஜய்க்கு ஆதரவாகவும் பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இவர் பேசிய இந்த பேச்சுக்கு தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதுவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இந்த நிலையில் யார் இந்த பொன்ராஜ்? இதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது பற்றிய ஒரு செய்தியை தான் இப்போது கட்டுரையாக இதில் நாம் பார்க்க போகிறோம்.
கலாம் சொன்னது என்ன?
மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களுடைய அறிவியல் அறிவுக்கும் ஏற்றவாறு தன்னுடைய ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தவர் தான் இந்த பொன்ராஜ். குறிப்பாக இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்த மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான ஏபிஜே அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்தவர். பல மேடைகளில் இவர் பேசும் பொழுது அடிக்கடி இவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ‘கலாம் சொன்னது என்ன?’ இதைத்தான் அடிக்கடி சொல்லுவார். அந்த அளவுக்கு அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தவர் பொன்ராஜ்.
முக்கிய பொறுப்பு:
அப்துல் கலாமின் கனவு திட்டமான இந்தியா 2020 திட்டத்தை வடிவமைப்பதில் பொன்ராஜுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். அதோடு அப்துல் கலாமின் உரைகளை தயாரிப்பதிலும் அவருடைய புத்தகப் பணிகளிலும் பொன்ராஜ் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார். ஒரு காலத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் தான் இந்த பொன்ராஜ். 2002 முதல் 2007 வரை அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் முக்கிய பொறுப்பிலும் பொன்ராஜ் இருந்துள்ளார்.
பக்கபலமாக இருந்த பொன்ராஜ்:
அப்துல் கலாம் எங்கு சென்றாலும் அவருடன் பொன்ராஜும் அது சார்ந்த கோப்புகளை வைத்துக்கொண்டு அமைதியாகவே செல்வதை அனைவருமே கவனித்திருப்போம். அப்துல்கலாமின் மறைவுக்கு பிறகு அவருடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே அரசியலில் நுழைந்தார். அதற்காக ஒரு கட்சியை தொடங்கினார். அதன் பிறகு மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராகவும் வேலை செய்தார். இவரைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம் இந்திய நாட்டின் மிக உயரிய பதவியில் இருந்த ஒருவருக்கு பக்கபலமாக அவருக்கு தூணாக இருந்தவர் தான் பொன்ராஜ்.
மனுஷனே கிடையாது;
ஆனால் இன்று அவர் பேசிய இந்த பேச்சு அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பெண்களை இந்த அளவு கொச்சையாக பேசுவாரா என அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது. அப்துல் கலாம் இப்படி பேச அனுமதிப்பாரா என்று கேட்டதற்கு அவர் ஏன் பேசப் போகிறார்? அவர் பெரிய மனிதர் என பொன்ராஜ் சொல்ல அப்போ நீங்க பெரிய மனுஷன் கிடையாதா என நிருபர் கேட்கிறார். அதற்கும் ‘இல்லை ,நான் பெரிய மனுஷன் கிடையாது. அரசியல் எனும் சாக்கடையில் நுழைந்து விட்டதால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும்’ என மிகவும் அசால்டாக பதில் சொல்லி இருக்கிறார் பொன்ராஜ்.
மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என மிக உறுதியாக கூறிவிட்டார். இவருடைய இந்த ஆடியோ வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பெண்கள் அடுத்தடுத்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் திமுகவிற்கு ஆதரவாகவும் இவர் இருப்பதால் ஒட்டுமொத்த ஆளும் கட்சியை எதிர்த்தும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.



0 Comments