சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு ஹீரோ என்றால் ஸ்டைலிஷ் ஆன லுக், மாநிறம், நல்ல உயரம் இப்படி இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற ஒரு பிம்பம் ஆரம்பத்தில் இருந்து வந்தது. ஆனால் அதை முற்றிலும் தகர்த்தெறிந்தவர் நடிகர் தனுஷ். மெலிவான உடல் கொண்ட ஒருவரால் ஹீரோவாக முடியுமா என்ற கேள்வியை உடைத்து ஹாலிவுட் வரை தன்னுடைய புகழை நிலை நிறுத்தியவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என ஒரு பன்முக கலைஞராக இன்று இளைய தலைமுறையினருக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார்.
அவருடைய நடிப்பில் சிறந்த 5 படங்கள் எவை? அப்படி அந்த படத்தில் என்னதான் இருக்கிறது? ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு செய்தியை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
முதல் அறிமுகம்:
2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் தனுஷ். இந்த படத்தை அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கினார். படத்திற்கு திரைக்கதை செல்வராகவன் எழுதியிருந்தார். இளைஞர்களிடையே இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி அடைந்த திரைப்படமாக மாறியது. இவர் அறிமுகமான போது ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தார். இவருடைய தோற்றத்தை கிண்டல் செய்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இருந்தாலும் தனது இரண்டாவது படமான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தான் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.
மிகச் சிறந்த 5 திரைப்படங்கள்:
ஆடுகளம்:
2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மதுரையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. தனுஷின் சினிமா வாழ்க்கையில் ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய பங்கை வகித்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவில் தனுஷ் தேசிய விருதை பெற்றார். அதேபோல சிறந்த இயக்குனர் என்ற பிரிவில் வெற்றிமாறன் தேசிய விருதை பெற்றார். இந்த படத்திற்கு மொத்தம் ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது.
இந்த படத்தில் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக மதுரை வட்டார வழக்கில் அவருடைய வசனங்கள் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியான நேரத்தில் படத்தில் உள்ள ஒத்த சொல்லால என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தனுஷுடன் இணைந்து இந்த படத்தில் கிஷோர், ஜெயபாலன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலமாகத்தான் டாப்ஸி முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
புதுப்பேட்டை;
2006 ஆம் ஆண்டு தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் புதுப்பேட்டை. தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய கல்ட் கிளாசிக் திரைப்படமாக இது வெளியானது. கேங்ஸ்டர் பின்னணியில் வெளியான இந்த படத்தில் ஒரு மிரட்டலான நடிப்பை தனுஷ் வழங்கி இருந்தார்.
கதைக்களம்:
ஒரு சாதாரண சிறுவனாக குமார் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் இந்த படத்தில் நடித்திருப்பார். எதிர்பாராத விதமாக தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக தனுஷ் ரவுடியாக மாற பின் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு தாதாவாக தனுஷ் உயர்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. தனுஷின் சினிமா பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தை தனுஷுக்கு இந்த படம் ஏற்படுத்தி கொடுத்தது. செல்வராகவன் இந்த படத்தை மிகவும் யதார்த்தமாக இயக்கியிருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்த படத்தின் பின்னணி இசை ஒரு அடையாளத்தை கொடுத்தது .
படத்தில் தனுஷ் உடன் சோனியா அகர்வால், சினேகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தியாவில் முதன் முதலில் 'சூப்பர் 35' கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் இந்த புதுக்கோட்டை திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அசுரன்:
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். வெக்கை என்ற நாவலை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான திரைப்படங்களில் இந்த அசுரன் திரைப்படம் மிகச்சிறந்த படைப்பாக கருதப்பட்டது.
நில உரிமை, சாதி பாகுபாடு போன்றவைகளைப் பற்றி இந்த படம் பேசுவதாக அமைந்தது. சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் தனது மகனையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் வகையில் தனுஷ் மிகவும் இந்த படத்தில் போராடி இருப்பார். அதன் பிறகு எப்படி ஒரு அசுரனாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் மையக்கருவாக அமைந்தது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இந்தப் படத்திலும் தனுஷ் பெற்றார். அது மட்டுமல்ல சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதும் இந்த படத்திற்கு கிடைத்தது. படத்தில் இளமையான தோற்றம் மற்றும் முதுமையான தோற்றம் என இரண்டு தோற்றங்களிலும் தனுஷ் அட்டகாசமாக நடித்திருந்தார். மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். பச்சையம்மா என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு மனைவியாக மஞ்சு வாரியார் இந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். கலைப்புலி எஸ் தானு படத்தை தயாரிக்க பசுபதி, கென்கருணாஸ். ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வடசென்னை:
2018 ஆம் ஆண்டு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஒரு பிரம்மாண்டமான கேங்ஸ்டர் திரைப்படம் தான் வடசென்னை. வட சென்னையில் வாழும் மக்களின் வாழ்க்கையை மற்றும் அங்கு நிலவும் அரசியலை மிகவும் தத்ரூபமாக இந்த படம் மக்களுக்கு வெளிக்காட்டியது. அதை வெற்றிமாறன் மிக தைரியமாக எடுத்ததுதான் சிறப்பு.
அன்பு என்ற கதாபாத்திரத்தில் கேரம் விளையாட்டு வீரராக தனுஷ் நடித்திருப்பார். நிம்மதியாக இருந்து நல்ல வேலைக்கு சென்று வாழ வேண்டும் என்று தனுஷ் நினைக்க அந்தப் பகுதியில் நடக்கும் அதிகார போட்டி மற்றும் ரவுடிசம் போன்றவற்றில் துரதிஷ்டவசமாக தனுஷ் சிக்குவார். அதன் பிறகு எப்படி தன்னுடைய மக்களுக்காக அவர் நிற்கிறார் என்பதுதான் கதை.
இந்தப் படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். அது மட்டுமல்ல சிறந்த வில்லனாக சமுத்திரக்கனி, சிறந்த இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், சிறந்த ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் என ஏழு பிரிவுகளில் இந்த படம் தமிழக அரசின் விருதுகளை வென்றது. இப்படத்தில் ராஜன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடித்திருந்தது மிகவும் வலிமையான கதாபாத்திரமாக அது அமைந்தது. கூடவே சந்தோஷ் நாராயணனின் இசை ஒரு தனி அடையாளத்தையே இந்த படத்திற்கு கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.
காதல் கொண்டேன்;
2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தனுஷிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் தனுஷ் அறிமுகமான நேரம் அது, ஆரம்பத்தில் பல விமர்சனங்களை அவர் சந்தித்து வந்த தருணம். அதனால் இந்த படம் தனுஷை ஒரு சிறந்த நடிகராக மக்களிடையே அங்கீகரிக்க செய்தது. இந்த படத்தில் வினோத் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பார். ஒரு சர்ச்சில் பாதிரியாரால் வளர்க்கப்படும் தனுஷ் எப்போதும் தனிமையை விரும்பும் சுபாவம் கொண்டவராகவே இந்த படத்தில் வருவார்.
அப்போது கல்லூரியில் படிக்கும் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சோனியா அகர்வாலுடன் தனுஷ் நட்பு கொள்கிறார். அந்த நட்பு பிறகு காதலாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் சைக்கோ திரில்லர் பாதையில் இந்த படத்தை செல்வராகவன் எடுத்துச் செல்வார். செல்வராகவன் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான். மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. குறிப்பாக தேவதை வம்சம் நீ, மற்றும் நெஞ்சோடு கலந்திடு போன்ற பாடல்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் பாடலாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது.
தனுஷின் படங்களை பொருத்தவரைக்கும் ஆரம்பத்தில் பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தார். ஏனெனில் இளைஞர்களுக்கு பிடித்தமான வகையிலேயே அவருடைய படங்கள் இருந்தது. அதனால் குடும்பம் குடும்பமாக அவருடைய படங்களை பார்க்க முடியாத வகையில் கதைகளும் அமைந்தது. ஆனால் சமீப காலமாக அவருடைய படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன. இதில் எந்த படங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தவை என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.


0 Comments