தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வருகை என்பது இப்போது இல்லை காலங்காலமாக இருந்து வரும் ஒன்றுதான். அதிலும் சமீப காலமாக களமிறங்கும் இளம் தலைமுறையினர் வெறுமனே வாரிசுகளாக மட்டுமில்லாமல் தனக்கே உரிய தனி திறமையுடனும் வருகிறார்கள். அப்படி சமீப காலமாக தமிழ் சினிமாவை கலக்கிய வாரிசு நடிகர்களை பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.
அசுரன் புகழ் கென்கருணாஸ்:
நடிகர் கருணாஸின் மகனும் நடிகருமான கென் கருணாஸ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அசுரன் திரைப்படத்தில் அனைவரையும் வியக்க வைத்தார். அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக ஓரிரு படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அசுரன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. அதன் பிறகு அவருடைய இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்து சமீபத்தில் இளைஞர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் யூத்.
இந்த திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஒரு சாதாரண இளைஞனின் போராட்டத்தையும் துடிப்பையும் வெளிக்கொண்டு வந்ததன் மூலம் கென் கருணாஸ் ஒரு நம்பிக்கை மிகு இளம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். ஹீரோவாக என்பதை விட ஒரு இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றியை பெற்றுள்ளார் என்று தான் குறிப்பிட வேண்டும். இந்த படத்திற்கான பட்ஜெட் அதைத் தாண்டி நான்கு மடங்கு வசூல் இந்த படம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் இந்த படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை.
முதன்முதலாய் பாடலில் மிரட்டும் பிரபுதேவாவின் மகன்:
சமீப காலமாக ஆல்பம் பாடல்கள் மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி ஒரு ஆல்பம் பாடல் மூலமாகத்தான் சாய் அப்யங்கர் என்ற ஒரு இசை கலைஞரை இந்த தமிழ் திரையுலகம் கண்டெடுத்தது. அந்த வகையில் முதன்முதலாய் என்ற ஒரு ஆல்பம் பாடல் மூலம் ரிஷி தேவா இளைஞர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளார். இவர் வேறு யாரும் இல்லை. பிரபு தேவாவின் மகன். இந்த ஆல்பம் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளை கடந்து இப்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆன பாடலாக மாறியுள்ளது. அப்படியே அப்பாவை பார்ப்பது போலவே இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அப்பா இயக்குனர் - மகன் ஹீரோ! யாத்ராவின் அறிமுகம்:
இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக பார்க்கப்படுவது நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் தான். அந்தப் படத்தை அவருடைய அப்பாவும் நடிகருமான தனுஷ் இயக்குகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. தனுஷை பொருத்தவரைக்கும் இயக்குனர் என்ற முறையில் அவர் ஏற்கனவே வெற்றியடைந்த ஒரு கலைஞராகத்தான் பார்க்கப்படுகிறார். இப்போது தன்னுடைய மகனை வைத்து எப்படிப்பட்ட ஒரு பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் அவரை அறிமுகம் செய்ய இருக்கிறார் என அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
என்னதான் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் ரசிகர்கள் திறமைசாலிகளை மட்டும்தான் ஊக்குவித்து வருகிறார்கள். அந்த வகையில் கென் கருணாஸ், ரிஷிதேவா, யாத்ராவின் வருகை கோலிவுட்டில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


0 Comments