Vanchinathan Movie: முதல் நாளே இரண்டரை கோடி அட்வான்ஸ்! விஜயகாந்தின் ‘வாஞ்சிநாதன்’ படம் உருவான கதை


 

வாஞ்சி நாதன் படம் தோன்றிய கதை:

Vijayakanth: தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் காலம் என்பது பெரிய அளவு ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. புரட்சி கலைஞர் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். குறிப்பாக வானத்தைப்போல படத்தின் ஒரு பெரிய வெற்றிக்கு பிறகு விநியோகஸ்தர்கள் மத்தியில் விஜய்காந்துக்கு என ஒரு தனி அங்கீகாரமே கிடைக்க ஆரம்பித்தது. அந்த சூழலில் தான் ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் விஜயகாந்தை வைத்து வாஞ்சிநாதன் படத்தை தயாரிக்க முன்வந்தனர். அப்போது நடந்த சுவாரசியமான தகவல்களை ரோஜா காம்பைன்ஸ் நிறுவனர் காஜா மைதீன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஒரு படத்தின் வியாபாரம் என்பது அந்தப் படம் வளர்ந்து அதனுடைய பாடல்களோ அல்லது டீசரோ அல்லது ட்ரைலரோ வெளியான பிறகு தான் அந்தப் படத்தினுடைய வியாபாரமே சூடு பிடிக்கும். ஆனால் வாஞ்சிநாதன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் முற்றிலும் தலைகீழாக இருந்தது. அந்தப் படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. அந்த சமயத்தில் தான் ரோஜா கம்பைன்ஸ் தயாரித்த பெண்ணின் மனதைத் தொட்டு திரைப்படமும் ரிலீஸ் ஆனது. ஒரு பக்கம் படம் ரிலீஸ், இன்னொரு பக்கம் விஜயகாந்தை வைத்து வாஞ்சிநாதன் படத்தின் பூஜை என காஜா மைதீன் மும்முரமாக இருந்தார்.

பூஜை போடும் போதே அடிதடி:

வானத்தைப்போல படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு விஜயகாந்தின் கால்சீட் கிடைப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் வாஞ்சிநாதன் படத்தை தயாரிக்க ரோஜா கம்பைன்ஸ் நினைத்தது. அந்தப் படத்தின் பூஜை சமயத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரே அடிதடி நடந்ததாக காஜாமைதீன் கூறியுள்ளார். ஒட்டுமொத்த விநியோகஸ்தர்களும் படத்தை வாங்க போட்டோ போட்டி போட்டுக் கொண்டு வந்திருக்கின்றனர். இந்த படத்தின் பூஜை சமயத்திலேயே ஒட்டுமொத்த டேபிள் பிராஃபிட்டையும் எடுத்து விட்டதாக காஜா மைதீன் கூறினார்.

அது மட்டுமல்ல எந்த ஒரு அக்ரீமெண்ட்டும் போடாமல் அட்வான்ஸ் கொடுக்கவும் முன் வந்திருக்கின்றனர். எவ்வித நிபந்தனையும் இன்றி இரண்டரை கோடி அட்வான்ஸ் கொடுத்தார்கள் என்றும் காஜாமைதீன் கூறியிருக்கிறார். விநியோகஸ்தர்கள் பணத்தைக் கொண்டு வந்து வைத்த போது ஏற்பட்ட நெரிசல் பார்ப்பதற்கு ஒரு பெரிய போர்க்களமாகவே இருந்ததாக அவர் மிகவும்  நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். இதைத் தாண்டி அந்த படத்தில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருந்தது என்பதை பற்றியும் இதில் நாம் பார்க்கலாம்.

ஏன் பெரிய எதிர்பார்ப்பு?:

மலையாளத்தில் ஆக்சன் படங்களுக்கு மிகவும் புகழ்பெற்ற ஷாஜி கைலாஷ் முதன்முதலாக இயக்கிய தமிழ் படம் வாஞ்சிநாதன். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜயகாந்த் இந்த படத்தில் நடித்திருந்ததனால் இது பெரிய ஹிட் ஆகும் என முன்பே கணிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான இந்த படம் எதிர்பார்த்தது போல மிகப் பெரிய வசூல் சாதனையையும் படைத்தது. விஜயகாந்தின் ஹிட் லிஸ்டில் எத்தனையோ படங்கள் இருந்தாலும் வாஞ்சிநாதன் திரைப்படமும் ஒரு மைல் கல்லாக அமைந்தது.


அது மட்டுமல்ல ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பெரிய புகழையும் தேடி தந்த படமாக வாஞ்சிநாதன் திரைப்படம் அமைந்தது. இன்றைய சூழலில் பல கோடிகளில் வியாபாரம் நடந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படத்தின் பூஜையிலேயே இரண்டரை கோடி ரூபாய் அட்வான்ஸ் என்பது ஒரு பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்ட விஷயம். இது விஜயகாந்த் போன்ற ஒரு மிகப்பெரிய ஆளுமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்று தான் சொல்ல வேண்டும்.

Post a Comment

0 Comments